சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த ரவுடி சங்கர் மீது, கொலை முயற்சி, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. சங்கரை பிடிக்கச் சென்ற காவலர்களை அவர் தாக்கியதால், தங்களை தற்காத்துக்கொள்ள காவலர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், ரவுடி சங்கர் மரணமடைந்தார் என காவல்துறை தெரிவித்தது. இந்நிலையில் சென்னையில் ரவுடி சங்கரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.
போலீசார் ரவுடி சங்கரை உடலின் மூன்று இடங்களில் சுட்டதாகக் கூரிய நிலையில், 12 இடங்களில் காயம் இருப்பதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கரின் இறந்த நேரமும், காவல்துறை சுடப்பட்ட நேரமும் முரணாக உள்ளது.
போலீசார் திட்டமிட்டு சங்கரை தாக்கி கொலை செய்துவிட்டு என்கவுண்டர் நாடகமாடுவதாக தெரிவித்ததால் சி.பி.சி.ஐ.டி களமிறங்கியது. இது தொடர்பாக சங்கரின் தாய் நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்ததிருந்தார். இன்ஸ்பெக்டர் நடராஜன் உட்பட காவலர்கள் தாக்கி இறந்ததால், சி.பி.சி.ஐ.டி கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். அதேபோல விசாரணையின் முடிவில் புகார் உண்மையானால் ஆய்வாளர் மீது சி.பி.சி.ஐ.டி வழக்குப் பதிவு செய்யும் என நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில் ரவுடி சங்கரின் உடம்பில் 12 இடத்தில் காயங்கள் இருப்பதாக பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியானதால் போலீசாருக்கு சிக்கல் எழுந்துள்ளது. சி.பி.சி.ஐ.டி போலீசார், இதுவரை 13 போலீசாரை 6 மணிநேரம் தனித்தனியாக விசாரித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நாளை சங்கரின் தொடர்பில் இருந்த ராணி அவரது மகன் திலிப், ரவுடி சங்கரின் நண்பன் தினகரையும் விசாரிக்க உள்ளதால் இந்த வழக்கு மேலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில், நீதிமன்றம் இவ்வழக்கை வருகிற 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.