திருச்சி மாநகரம் பாலக்கரை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சரித்திரப்பதிவேடு ரவுடி விமல்ராஜ்(23). இவர், பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளதால், தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக, பாலக்கரை காவல்நிலைய ஆய்வாளரின் பிணைய அறிக்கையின்படி நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றத்தின் முன்பு ஆஜர் செய்ததின் பேரில், ஒரு வருட காலத்திற்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கமாட்டேன், குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டேன் என்ற நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை விமல்ராஜ் தாக்கல் செய்துள்ளார்.
ஆனால், விமல்ராஜ் நன்னடத்தை பிரமாண பத்திரம் தாக்கல் செய்த பின்பு, நன்னடத்தை பிரமாண பத்திரத்தை மீறி கத்திய காட்டி மிரட்டி பொதுமக்களிடம் வழிப்பறி செய்தல் மற்றும் பொது சொத்திற்கு பங்கம் விளைவித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டார். அதனால் அவர்மீது பாலக்கரை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 28.04.22-ந் தேதி நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். இந்த வழக்கு விசாரணையில், அவர் தாக்கல் செய்த நன்னடத்தை பிரமாண பத்திரத்தில் குற்றசெயல்கள் புரியாமல் நன்னடத்தையில் இருந்த காலத்தை தவிர மீதியுள்ள 257 நாட்களை சிறையில் கழிக்க நிர்வாக செயல்துறை நடுவர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து ரவுடி விமல்ராஜ் உடனடியாக திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.