தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவம் திருச்சி ரவுடி வண்ணாரப்பேட்டை துரை என்கிற துரைசாமி என்கவுண்டர். கடந்த வாரம் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் - வம்பன் இடையே தனியார் வேளாண் கல்லூரி எதிரே உள்ள வனத்துறைக்கு சொந்தமான தைலமரக்காட்டில் ரவுடி துரை என்கவுண்டர் செய்யப்பட்டார்.
இது குறித்து ஆலங்குடி போலிசாரின் முதல் தகவல் அறிக்கையில், 'திருவரங்குளம் - வம்பன் இடையே உள்ள தைலமரக்காட்டில் மர்ம நபர்கள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து ஆலங்குடி காவல் ஆய்வாளர் முத்தையா தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது மறைந்திருந்த திருச்சி ரவுடி வண்ணாரப்பேட்டை துரை என்கிற துரைசாமி மற்றுமொரு நபர் போலீசாரை தாக்க முயன்ற போது போலீசார் சரணடையச் சொல்லியும் கேட்காமல் துரை நாட்டுத் துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டார். அரிவாளை காட்டி மிரட்டியதோடு பிடிக்க முயன்ற உதவி ஆய்வாளர் மகாலிங்கத்தை முயன்றார். ஆய்வாளர் முத்தையா தற்காப்பிற்காக சுட்டதால் ரவுடி துரை உயிரிழந்தார்.
உடனிருந்த நபர் தப்பி ஓடிவிட்டார்' என பதிவு செய்யப்பட்டிருந்தது. சம்பவ இடத்தை தொடர்ந்து போலீசார் பாதுகாத்து வரும் நிலையில் ரவுடி துரையிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சிங்கிள் பேரல் துப்பாக்கி மற்றும் அரிவாளை ஆலங்குடி போலீசார் இன்று ஆலங்குடி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். மேலும் சம்பவ இடத்தை மனித உரிமை அமைப்பினர் ஆய்வு செய்ய வேண்டியுள்ளதால் பாதுகாப்பு தொடர்கிறது.