கடலூர் மத்திய சிறையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக ரவுடி எண்ணூர் தனசேகரன் விசாரணை கைதியாக உள்ளார். இவர் மீது 30க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் கடலூர் மத்திய சிறையில் சிறைக் காவலர்கள் சோதனை மேற்கொண்டபோது எண்ணூர் தனசேகரன் அறையில் செல்போன் மற்றும் சார்ஜர் பறிமுதல் செய்யப்பட்டது. அதனைப் பறிமுதல் செய்த சிறை உதவி ஜெயிலர் மணிகண்டனுக்கு எண்ணூர் தனசேகரன் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். மேலும் கூலிப்படையை வைத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி உதவி ஜெய்லர் மணிகண்டனின் வீட்டிற்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து குடும்பத்துடன் கொலை செய்ய முயன்றுள்ளார். இதில் தன் வாய்ப்பாக ஜெயிலர் மணிகண்டன் குடும்பத்தினர் உயிர் தப்பினர். இந்த வழக்கில் தனசேகரன் மற்றும் அவரது கூலிப்படையினர், அவரது மனைவி என 11 பேர் மீது கடலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் எண்ணூர் தனசேகரன் நேற்று விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு வரப்பட்டார். இந்த நிலையில் இன்று அதிகாலை அளவுக்கு அதிகமாக பி.பி மாத்திரைகளை சாப்பிட்டு சிறைக்குள் மயங்கி விழுந்துள்ளார் தனசேகரன். இதனைத் தொடர்ந்து சிறை ஊழியர்கள் அவரை கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதல் கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு பின்னர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எண்ணூர் தனசேகரன் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று நீதிமன்றத்திற்கு சென்று வந்த நிலையில் இன்று காலை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.