சேலம் சிறையில் இருந்து பிணையில் விடுதலை ஆன ரவுடியை, சிறை வாயிலில் வைத்து வேறொரு வழக்கில் கைது செய்த காவல்துறையினர், அவரை மீண்டும் சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் தணிகை என்ற தணிகைவேல் (வயது 35). ரவுடியான இவர் மீது 4 கொலை, வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் உள்ளன.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மற்றொரு ரவுடி ஸ்ரீதர் தரப்புக்கும், தணிகைவேல் தரப்புக்கும் தொடர்ந்து மோதல் இருந்து வந்தது. காவல்துறை துரத்தலுக்கு பயந்து ஸ்ரீதர் கம்போடியா நாட்டுக்கு தப்பிச்சென்றார். அங்கு திடீரென்று அவர் மர்மமான முறையில் இறந்தார்.
ஆனாலும் ஸ்ரீதர் கும்பலுடன், தணிகைவேல் கோஷ்டியினர் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இருதரப்பைச் சேர்ந்தவர்கள் பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், சேலம் சிறையில் இருந்த தணிகைவேலுக்கு பிணை கிடைத்து, வெளியே வந்தார். அப்போது அவரை வேறு ஒரு வழக்கில் கைது செய்ய காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினர் சிறை வாயிலில் காத்திருந்தனர்.
இதையறியாத தணிகைவேல் மகிழ்ச்சியுடன் சிறைக்கு வெளியே வந்தபோது, அவரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில் அவரை மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.