தூத்துக்குடியின் சுந்தரவேல்புரத்தைச் சேர்ந்தவர் முருகன் என்ற கட்டை முருகன் (27). இவர் மீது தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் காவல் நிலையத்தில் ரவுடி லிஸ்ட்டிலும் வருபவர். இவரது நண்பர் அழகேசபுரத்தைச் சேர்ந்த கோகுல்ராம். இருவரும் தாளமுத்து நகரில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்த 40 வயதுடைய பெண்ணை கத்தியைக்காட்டி மிரட்டி வலுக்கட்டாயமாக பைக்கில் ஏற்றிக் கடத்திச் சென்றவர்கள், 5 குழந்தைகளின் தாயான அந்தப் பெண்ணை தருவைக்குளம் கல்மேட்டில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்த கட்டை முருகன், பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மறுநாள் அந்தப் பெண்ணை அவரது வீட்டின் அருகே உள்ள சந்திப்பில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர்.
இதனிடையே கோகுல் ராமும் அந்தப் பெண்ணின் செல்லில் தொடர்பு கொண்டு தன்னுடன் வருமாறு அழைக்கவே அவர் மறுத்துள்ளார். ஆத்திரமடைந்த கோகுல் ராம் அந்தப் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க இன்ஸ்பெக்டர் வனிதா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த விவகாரம் தெரியவரவே கட்டை முருகன், கோகுல் ராம் ஆகிய இருவரும் தலைமறைவானர்.
தகவலறிந்த மாவட்ட எஸ்.பி.யான பாலாஜி சரவணன், உத்தரவின் அடிப்படையில் டவுண் டி.எஸ்.பி. சத்ய ராஜ் தலைமையிலான தனிப்படையினர் தலைமறைவான இருவரையும் தீவிரமாகத் தேடினர். இந்நிலையில், கட்டை முருகன், கோகுல் ராம் இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்குப் பின்பு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தி சிறையிலடைத்தனர்.
மாவட்டத்தில் ரவுடித்தனம், பாலியல் குற்றம் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி.பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.