Skip to main content

அலைக்கழிக்கும் அதிகாரிகள்; தீக்குளிப்பேன் என கலங்கும் முன்னாள் வி.ஏ.ஓ

Published on 24/09/2023 | Edited on 24/09/2023

 

Former vao in struggle to change patta

 

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம் நங்கவரம் பேரூராட்சி, கீழ் நங்கவரம், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் என். மருதை (71). முன்னாள் கிராம நிர்வாக அலுவலரான இவர், கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பணி ஓய்வு பெற்றார். இவர், தனக்கு சொந்தமான 43 சென்ட் இடத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறார். இந்த இடத்திற்கான பட்டா சிட்டா பத்திரம் என அனைத்து ஆவணங்களையும் வைத்துள்ளார். அனைத்து ஆவணங்களையும் வைத்திருந்த போதிலும் கடந்த 2018 ஆம் ஆண்டு கணினி மையமாக்கப்பட்டபோது 43 சென்ட் என்பதற்கு பதிலாக 12 சென்ட் என தவறாக கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இதனால், கணினி பட்டாவை திருத்தம் செய்யக்கோரி கடந்த 2020ம் ஆண்டு முதல் பலமுறை கரூர் மாவட்ட ஆட்சியர், குளித்தலை கோட்டாட்சியர், குளித்தலை வட்டாட்சியர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் குறைதீர்க்கும் பிரிவு உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் மனு கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி ஜமாபந்தி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளிலும் இது சம்பந்தமாக கோரிக்கை மனு அளித்துள்ளார். இருப்பினும் அவரது கோரிக்கை இது நாள் வரையிலும் நிறைவேற்றப்படவில்லை.

 

குளித்தலை தாலுகா அலுவலகத்திற்கு விசாரணை மனுவை அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் கூறினாலும், அங்கு சென்று அவர் விசாரித்தால் ‘உங்களுடைய மனுவே வரவில்லை அது எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை’ என்று சாக்குப் போக்கு சொல்லி அலைய விடுவதாக குற்றம் சாட்டுகிறார் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் மருதை. 

 

தனது மனைவி பெயரில் உள்ள 43 சென்ட் நிலத்தின் பட்டாவை தவறாக கணினியில் பதிவு செய்யப்பட்டதால், அவரது மனைவி மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும் இதனால் அவர் சமீபத்தில் இறந்து விட்டதாகவும் கண்கலங்க கூறுகிறார் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் மருதை. 

 

மேலும், தனக்கு 71 வயது ஆகிறது. தினமும் என்னால் குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு 30 கிலோமீட்டர் தூரம் சென்று வர இயலவில்லை. இதற்கு மேலும் என்னை அலைக்கழித்தால், நான் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருப்பதைத் தவிர வேறு வழியில்லை. அதற்கும் வழியில்லை என்றால் தீக்குளிப்பேன் என்று கண்ணீர் மல்க கூறுகிறார். 

 

 

 

சார்ந்த செய்திகள்