கும்பகோணத்தைச் சேர்ந்த விசிக கவுன்சிலர் வீட்டின் கட்டிலுக்கு அடியில் ரவுடிகள் பதுங்கி இருந்த சம்பவமும், கொடுமையான ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக விசிக பிரமுகரும் கைது செய்யப்பட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கும்பகோணம் பேருந்து நிலையம் அருகே உள்ளது பாத்திமாபுரம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் விசிக பிரமுகரான அலெக்ஸ். இவருடைய மனைவி கும்பகோணம் மாமன்ற கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில் இவர்களுடைய வீட்டில் சந்தேகப்படும் வகையில் சில நபர்கள் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் விசிக கவுன்சிலரின் வீட்டில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
போலீசார் சோதனைக்கு அலெக்ஸ் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். 'இங்கு யாரும் பதுங்கி இருக்க வில்லை' என ஆட்சேபனை தெரிவித்தனர். ஆனால் போலீசார் தரப்பு தாங்கள் நீதிமன்றத்தின் அனுமதிபெற்று வந்திருப்பதாகக் கூறி வீட்டின் ஒவ்வொரு அறைகளையும் சோதனையிட்டனர். அப்போது வீட்டின் பிரதான படுக்கையறையின் கட்டிலுக்கு அடியில் சிலர் பதுங்கி இருந்தது தெரியவந்தது. கிங் ஆண்டனி, அர்னால்டு ஆண்டனி, பாலுசாமி, அருண்குமார், அஜய் என்கிற நான்கு பேரையும் கட்டிலுக்கு அடியில் இருந்து வெளியே வர செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த மொத்தம் 22 கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட 5 பேரும் பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. குற்றச்செயலில் தொடர்புடையவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக விசிக பிரமுகர் அலெக்ஸையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக விசிக பிரமுகரின் வழக்கறிஞர்கள் தரப்பு கூறுகையில், 'பாத்திமாபுரத்தில் அலெக்ஸ் வீட்டின் எதிரே உள்ள நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்கி வந்துள்ளார். ஏன் இவ்வாறு வேகமாக வருகிறீர்கள் என அலெக்ஸ் தரப்பினர் கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது தகராறாக முற்றியது. இதனடிப்படையில் அந்த நபர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் காவல்துறையினர் அலெக்ஸ் வீட்டில் சோதனை செய்துள்ளனர். போலீசார் பறிமுதல் செய்த ஆயுதங்கள் மாட்டிறைச்சி வெட்டி விற்பதற்காக வைத்திருக்கப்பட்ட கருவிகள்' என்று விளக்கம் தெரிவித்துள்ளனர்.