வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தாதவள்ளி கிராமத்தில் அரசின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையென நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். நவம்பர் 7ந்தேதி மதியம் பள்ளியின் சமையல் கூடத்தில் மாணவ – மாணவிகளுக்கு சாப்பாடு போட்டுள்ளனர். அப்போது, சாப்பாட்டோடு சேர்ந்து தரப்படும் முட்டைகள் அழுகிய நிலையில் இருந்துள்ளது.
மதியம் பள்ளிக்கு வந்த அதே ஊரை சேர்ந்த பெற்றோர் ஒருவர் பார்த்துவிட்டு கேள்வி எழுப்பியுள்ளார். அங்கிருந்த சமையலர்கள், அரசாங்கம் அனுப்பற முட்டையை தானே வேகவைத்து தருகிறோம், நாங்களா வாங்கி வந்து சமைத்து போடுகிறோம். நீங்கள் கேள்வி கேட்க வேண்டியது முட்டை அனுப்புகிறவர்களைதான், எங்களையல்ல எனச்சொல்லியுள்ளார்கள்.
அந்த அழுகிய முட்டைகளை பார்த்து அதிர்ச்சியானவர் ஊராரிடம் இதுப்பற்றி சொல்ல, அவர்கள் மாணவர்களிடம் முட்டைகளை வாங்காதீர்கள் எனச்சொல்லியுள்ளனர். இதனால் பிள்ளைகள் யாரும் மதிய உணவுக்கு வழங்கிய முட்டையை வாங்காமல் புறக்கணித்துள்ளார்கள். இதுப்பற்றி அந்த ஊரை சேர்ந்தவர்கள் ஊராட்சி அதிகாரிகள் மற்றும் கல்வித்துறையில் சொன்னபோது, இப்போது வரை யாரும் அதுப்பற்றி விசாரிக்ககூடயில்லை என வேதனை தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
இந்த விவகாரத்தை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கவனத்துக்கு சிலர் கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அவரும் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் போராட்டம் செய்வோம் என்கிறார்கள் அக்கிராம மக்கள்.