அய்யர்மலை கோவிலில் ரோப் கார் சேவையில் திடீரென ஏற்பட்ட பழுதால் அதில் பயணம் செய்த பெண்கள் அந்தரத்தில் தத்தளிக்கும் வீடியோ காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம், சிவாயம் அடுத்துள்ள அய்யர்மலையில் அமைந்துள்ளது ரத்தினகிரீஸ்வரர் கோவில். மொத்தம் 1017 படிகளைக் கொண்ட இந்த மலை கோவிலுக்காக பிரத்தியேகமாக 10 கோடி ரூபாய் செலவில் ரோப் கார் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சீரமைப்பு பணிகளுக்காக ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டு நேற்று அதற்கான பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று மீண்டும் ரோப் கார் சேவை தொடங்கியது.
இந்நிலையில் பெண்கள் 4பேர் ரோப்காரில் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென அந்தப் பகுதியில் அதிகமான காற்று வீசியதால் கம்பிகள் தடம் மாறின. இதனால் ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அதைச் சரி செய்யும் பணிகள் நடைபெற்றது. ஆனால் அந்தரத்தில் சுமார் 1000 அடி உயரத்தில் ரோப் காரில் அமர்ந்திருந்த 4 பெண்கள் நேரம் செல்ல செல்ல பயத்தில் கூச்சலிட்டனர். கீழே இருந்தவர்கள் பயப்பட வேண்டாம் என ஆறுதல் சொல்லினர். இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மீட்புபணி நடைபெற்று வருகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.