![Robbery at Village administration officers home...](http://image.nakkheeran.in/cdn/farfuture/tqd1jWFqwbo64pxKDdqVJBbM0cV9t0ifs-9YTeXAOlQ/1601986576/sites/default/files/inline-images/kallakurichi-in_5.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ளது மேலூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவர் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவர், இவருடைய மனைவி ராஜாமணி இருவரும் தனியே வசித்து வருகிறார்கள். இவர்களது மகன் மற்றும் மகள்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது. அதனால் அவர்கள் அனைவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சம்பவத்தன்று ராஜமாணிக்கம் உள்ளூர் கிராம நிர்வாக அலுவலருக்கு உதவியாக ஒரு விவசாய நிலத்தை அளவீடு செய்வதற்காக சென்றுள்ளார். வெளியே சென்ற ராஜமாணிக்கம் மதியம் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.7 லட்சம் மதிப்புள்ள, சுமார் 14 சவரன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரிய வந்துள்ளது.
அங்கிருந்த, சில கவரிங் நகைகளை அடையாளம் கண்டு அவைகளை மட்டும் அங்கேயே போட்டுவிட்டுக் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ராஜமாணிக்கம், சின்னசேலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். இதேபோன்று கள்ளக்குறிச்சி அருகிலுள்ள மேலூர் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் ஒருவர்வீட்டில் சமீபத்தில் 8 பவுன் நகை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இப்படி அடுத்தடுத்து கிராம நிர்வாக அலுவலர் வீடுகளில் நடந்துள்ள கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.