கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே விருத்தாசலம் திட்டக்குடி சாலையில் பட்டூர், கோழியூர் உள்ளது. இந்த ஊர்களுக்கு இடையில் திட்டக்குடி சேர்ந்த மணிகண்டன் என்பவர் எம்.ஆர்.எஃப். டயர் ஷோரூம் வைத்துள்ளார். அங்கு எம்.ஆர்.எஃப். கம்பெனி வாகனங்களுக்கான டயர்கள் விற்பனை செய்வதும் பழைய டயர்களை புதுப்பித்து தருவதும் நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் ஷோரூமை பூட்டிவிட்டு தன் வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலை திறப்பதற்காக மணிகண்டன் வந்துள்ளார். அப்போது ஷோரூமின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்த மணிகண்டன், காவல்துறையினருடன் உள்ளே சென்று பார்த்தபோது கடையிலிருந்து 8,000 ரூபாய் மதிப்பிலான 13 டயர்கள், சி.பி.எஸ்., யு.பி.எஸ். அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா உட்பட ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
மணிகண்டன் புகாரின் பேரில் ஆவினன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். விருத்தாசலம் திட்டக்குடி பகுதியில் 24 மணி நேரமும் பரபரப்பாக வாகனங்கள் இயங்கிவரும் சாலையின் அருகில் இருந்த எம்.ஆர்.எஃப். ஷோரூமில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் திட்டக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.