திருச்சியில் 950 கிராம் தங்கம், வெள்ளி, பணம் ஆகியவை திருடு போன சம்பவத்தில் நகை பணம் ஆகியவற்றை போலீசார் மீட்டுள்ளனர்.
திருச்சி பெரிய கடை வீதி, சந்து கடை பகுதியில் உள்ள சுந்தரபாண்டியன் பிள்ளை தெருவில் வசித்து வருபவர் ஜோசப்(40). இவர் வீட்டிலேயே நகை செய்யும் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த 10 நாட்களாக பக்கத்து தெருவில் கட்டப்பட்டுள்ள புதிய வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று வசித்து வருகிறார். பழைய வீட்டில் பட்டறை வைத்திருப்பதால் வீட்டிற்கு பாதுகாப்பிற்காக மட்டும் இரவு வந்து தங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் உடல் அசதி காரணமாக பட்டறை வைத்திருக்கும் வீட்டிற்கு வராமல் அவர் புதிய வீட்டிலேயே தங்கி விட்டதால், இரவு பட்டறையில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். நேற்று முன்தினம் கடையை மூடிவிட்டு, வழக்கம்போல் இன்று காலை ஜோசப் பட்டறையை திறப்பதற்காக வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதை எடுத்து ஜோசப் கோட்டை காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துணை ஆணையர் அன்பு, உதவி ஆணையர் நிவேதா, ஆய்வாளர் சுலோச்சனா, உதவி ஆய்வாளர் கோபால், உள்ளிட்ட காவல்துறையினர் கொள்ளை நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மேலும், அருகில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை வேறு திசைக்கு திருப்பி விட்டு வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் வைக்கப்பட்டிருந்த 950 கிராம் எடையுள்ள தங்க நகைகள், கால் கிலோ எடையுள்ள வெள்ளி, ஒன்றரை லட்சம் பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சந்தேகத்தின் பெயரில் இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
தனிப்படையினரின் புலன் விசாரணையில் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு விசாரணை செய்ததில், திருச்சி மாநகரம், கோட்டை காவல்நிலைய சந்தேக சரித்திர பதிவேடு (Suspect History Sheet) உள்ள ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்ட பரணி குமார், பல்வேறு வழக்கில் சம்மந்தப்பட்ட சரவணன் உள்ளிட்டவர்களை தனிப்படையினர் கைது செய்தனர். திருடப்பட்ட நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேற்கண்ட வழக்கில் சிறப்பாக பணியாற்றி துரிதமாக புலன் விசாரணை செய்து குற்றவாளியை கைது செய்த ஸ்ரீரங்கம் சரக காவல் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி மற்றும் கோட்டை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுலோச்சனா மற்றும் தனிப்படையினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா வெகுவாக பாராட்டி, வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.