ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் 12 கோடி ரூபாய் நகைகளைக் கொள்ளையடித்த சம்பவத்தில் தெலுங்கானாவில் பிடிபட்ட கொள்ளையர்கள் 7 பேரை காவல்துறையினர் விசாரணைக்காக ஓசூர் அழைத்து வரப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முத்தூட் பைனான்ஸ் என்ற தனியார் நகை அடகு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் சில நாட்களுக்கு முன்பு 7 பேர் கொண்ட வடமாநில கொள்ளை கும்பல், 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ தங்க நகைகளை, பட்டப்பகலில் ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளை அடித்துச் சென்றனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த ஓசூர் ஹட்கோ போலீசார், சம்பவம் நடந்த 18 மணி நேரத்தில் கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா மாநில போலீசார் உதவியுடன் ஹைதராபாத் அருகே கொள்ளை கும்பலைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளை அடிக்கப்பட்ட 25 கிலோ நகைகள், 7 துப்பாக்கிகள், 96 தோட்டாக்கள், ஒரு லாரி, டாடா சுமோ கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
உடனடியாக தெலங்கானா சிறையில் அடைக்கப்பட்ட கொள்ளையர்களை, ஓசூருக்கு அழைத்து வர போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து ஹைதராபாத் சென்ற ஓசூர் போலீசார், கொள்ளையர்களை ஓசூர் அழைத்துச் செல்ல அனுமதி கேட்டு அங்குள்ள சைபராபாத் நீதிமன்றத்தில் ஜன. 25ம் தேதி மாலை மனுத்தாக்கல் செய்தனர். நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை (ஜன. 26) கொள்ளையர்கள் 7 பேரை ஓசூர் அழைத்து வந்தனர். உடனடியாக ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள், அங்குள்ள கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விரைவில் அவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்கவும் ஓசூர் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் சிலர் கொள்ளையடிக்க முயன்றனர். அதில் 3 பேர் பிடிபட்டனர். அந்த சம்பவத்தில் தப்பிய சிலர்தான், முத்தூட் பைனான்ஸ் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இதனால் பிடிபட்ட கும்பலிடம் விசாரணை நடத்த விரைவில் பஞ்சாப் மாநில போலீசாரும் ஓசூர் வர உள்ளனர்.
இதேபோல், நாடு முழுவதும் நிதி நிறுவனங்கள், வங்கிகளில் நடந்த கொள்ளைச் சம்பவத்திற்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. அவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்கும்போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.