திருச்சியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பேராசிரியரை அடித்துத் தரதரவென இழுத்துச்சென்ற திருடனின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீதாலட்சுமி என்ற பேராசிரியர் கடந்த 12 ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் இருந்த பள்ளி மைதானத்தின் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு நடைப்பயிற்சி மேற்கொண்டார். 53 வயதுடைய சீதாலட்சுமி நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் பலமான கட்டையால் சீதாலட்சுமியின் பின்னந்தலையில் அடித்துள்ளார்.
பலமாக அடித்ததால் நிலைகுலைந்த சீதாலட்சுமியை தரதரவென இழுத்துச் சென்று சாலையில் ஓரமாகக் கிடத்தி அவரது நகைகள், செல்போன், அவரது இருசக்கர வாகனம் என அனைத்தையும் கொள்ளை அடித்துச் சென்றுள்ளார். இது குறித்து சீதாலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து தஞ்சாவூரைச் சேர்ந்த செந்தில் என்பவரைக் கைது செய்துள்ளனர். அவரைப் பிடிக்கச் சென்றபோது திருடிய வண்டியில் வேகமாகச் சென்றதால் நிலைதடுமாறி தடுப்பில் மோதி கீழே விழுந்துள்ளார். இதனால் அவரது வலதுகால் முறிந்தது. காயமடைந்தவரை மீட்ட காவல்துறையினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நடைப்பயிற்சி மேற்கொண்ட பேராசிரியரை அடித்துத் தரதரவென இழுத்துச் செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.