ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த மக்கள், ஆட்சியரை சந்தித்து தங்களுக்கான பிரச்சினைகள் குறித்த மனுக்களை வழங்கினர். அப்போது ஈரோடு மாநகராட்சி பகுதியில் சாலையோர வியாபாரம் செய்யும் வியாபாரிகள் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- ‘நாங்கள் சாலையோரத்தில் எலக்ட்ரானிக் பொருட்கள், செருப்பு, சிறு குழந்தைகளுக்கான உடைகள், விலை குறைவான துணிகள், பொம்மைகள், மீன் தொட்டிகள், பெல்ட் உள்ளிட்ட தோல் பொருட்கள், பாலிஷ் போட்ட பழைய பாத்திரங்கள் என 55 பேர் சாலையோரம் வைத்து வியாபாரம் செய்து வருகிறோம். இதில் கிடைக்கும் வருமானமே எங்களுக்கு வாழ்வாதாரமாகும். ஈரோடு மணிக்கூண்டில் இருந்து முத்தரங்கம் வீதி வரை நேதாஜி ரோட்டில் சாலை ஓரத்தில் கடைகள் போட்டு கடந்த 20 வருடங்களாக வியாபாரம் செய்து வந்தோம். தற்போது எங்களை இந்த பகுதியில் கடைகள் அமைக்கக் கூடாது, அவ்வாறு அமைத்தால் பொருட்களை எல்லாம் பறிமுதல் செய்து விடுவோம் என மாநகராட்சி அதிகாரிகள் கூறிவிட்டனர்.
நாங்கள் அவர்களிடம் இப்படி திடீரென செய்தால் எங்கள் பொருளாதாரம், வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வேறு மாற்றம் கொடுத்தாலாவது நாங்கள் அங்கே சென்று வியாபாரம் செய்து கொள்வோம் என்று தெரிவித்தும் அதை அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. தற்போது நாங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நிற்கிறோம். எனவே எங்கள் நிலையை கருத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை 4 மணி நேரத்திற்கு மட்டும் கடை அமைத்து வியாபாரம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.’ இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.