தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் ஈரோடு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் அதன் நிர்வாகிகள் ஈரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். உயிரிழந்த சாலைப் பணியாளர்களின் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாரிசு அடிப்படையில் வேலை வழங்கவேண்டும்.
சாலைப் பணியாளர்களை திறன்மிகு ஊழியர்களாக அறிவித்துத் தர ஊதியமாக மாதம் ரூபாய் 1,900 என மாற்றி புதிய ஊதியம் நிர்ணயம் செய்து நிலுவைத் தொகை வழங்க வேண்டும். சீருடை, சலவை படி, விபத்து படி, சைக்கிள் படி வழங்க வேண்டும். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். அரசாணை 56 -ஐ ரத்து செய்ய வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்தது போல் தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அதன் முக்கிய நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்திற்குச் சென்று கோரிக்கைகளை வலியுறுத்தி அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.