செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே வயலூரில் ஒரே காரில் 5 பேர் சென்னையை நோக்கி கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று (14.05.2024) வந்து கொண்டிருந்தனர். அப்போது கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமிருந்த ஒரு மரத்தின் மீது வேகமாக மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் 3 பேர் காரின் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதே சமயம் கவலைக்கிடமான நிலையில் இருந்த 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இத்தகைய சூழலில் இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் உயிரிழந்தவர்கள் சென்னை சூளைப்பள்ளம் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த ராஜேஷ், ஏழுமலை, வடபழனியைச் சேர்ந்த விக்னேஷ், மாம்பலத்தைச் சேர்ந்த யுவராஜ் என்பதும் தெரியவந்தது. மற்றொரு நபரை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். நண்பர்களான 5 பேரும் புதுச்சேரிக்கு சென்று விட்டு சென்னை திரும்பிய போது சாலையின் குறுக்கே மாடு ஒன்று வந்துள்ளது. அதன் மீது மோதிய கார் சாலையோர மரத்தின் மீதும் மோதி விபத்தில் சிக்கியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதே சமயம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கி கார் ஓட்டுநர் சரவணன், ஜெய்பினிதா மற்றும் அவரது மகன்கள் விஷால், பைசல் ஆகியோர் உயிரிழந்தனர். வெளிநாடு செல்லும் தனது கணவரை வழியனுப்பி வைத்துவிட்டு ஜெய்பினிதா என்பவர் தனது குழந்தைகளுடன் காரில் வீடு திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக ஓட்டுநர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் அவரது மகன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். செங்கல்பட்டு மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.