தமிழ்நாடு ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநிலத்துக்கு கடந்த வாரம் மாற்றப்பட்டார். இதனையடுத்து தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நாகாலாந்த் ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.என். ரவியின் முழு பெயர் ரவீந்திர நாராயண ரவி. 1976ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்ற ஆர்.என். ரவியின் பூர்வீகம் கேரளா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று (18.09.2021) காலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாட்டின் 26வது ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றார். இவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ. வேலு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். காங்கிரஸ் கட்சி இவ்விழாவைப் புறக்கணித்துள்ளது.