மாணவர்களின் சீர் கெட்ட நடவடிக்கைகளால் சில அசம்பாவிதங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கத்தான் செய்கிறது. ஓடும் பேருந்துகளில் ஏறுவது, பேருந்துகளில் பொதுமக்களுக்கு இடையூறு செய்வது தொடர்பான வீடியோ காட்சிகள் அனுதினமும் சமூக வலைத்தளங்களில் குவிந்து வருகின்றன. பேருந்தில் படியில் தொங்கிக் கொண்டு சென்ற பள்ளி மாணவர்கள் தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடையும் செய்திகளும், சிசிடிவி காட்சிகளும் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
சீசனுக்கு ஒன்று என்பதுபோல் அவ்வப்போது இதுபோன்ற ஆபத்தான பயண வீடியோக்கள் வெளியாகித்தான் வருகின்றன. கும்பலாக பேருந்தில் தொங்கிக்கொண்டு அலப்பறை செய்யும் மாணவர்களிடம் கேட்டால், இந்த வழித் தடத்தில் அதிக பேருந்துகள் இல்லை என்பதால் தொங்கிக்கொண்டு செல்கிறோம் எனச் சமாளிக்கும் பதில்கள்தான் கிடைக்கின்றன. அண்மையில் பெண்கள் பேருந்தில் ஏறிய சில கல்லூரி மாணவர்கள், பேருந்து வசதி இல்லாததால் பேருந்தில் இருந்து இறங்க முடியாது என நடத்துநரிடம் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய காட்சிகள் கூட வைரலாகி இருந்தன. இந்த நிலையில் பள்ளி மாணவன் ஒருவன் கூட்ட நெரிசலே இல்லாத பேருந்தில் ஜன்னல் கம்பியைப் பிடித்து எழுந்து நின்றபடி ஆபத்தை விலைக்கு வாங்கும் வகையில் பயணிக்கும் வீடியோ காட்சி மீண்டும் வைரலாகி வருகிறது. தருமபுரி மாவட்டம் அரூர் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது.