நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடர் டிசம்பர் 22 ஆம் தேதி வரை மொத்தம் 19 நாட்கள் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் மாநிலங்களவையில் திமுக எம்.பி. எம்.எம். அப்துல்லா உரையாற்றும்போது, தந்தை பெரியாரின் பெயரைச் சுட்டிக்காட்டிப் பேசி இருந்தார். அப்போது பாஜகவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து தந்தை பெரியாரின் பெயர் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.
இந்நிலையில் தந்தை பெரியாரின் பெயரை அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டதற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மாநிலங்களவையில் திமுக எம்.பி. எம்.எம். அப்துல்லா உரையாற்றும்போது சுட்டிக் காட்டிய தந்தை பெரியாரின் மேற்கோளுக்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெரியாரின் பெயரும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது.
மண்டல் ஆணையப் பரிந்துரையை அமல்படுத்தியபோது தந்தை பெரியார்தான் இதற்குக் காரணம் என்று பிரதமர் வி.பி. சிங் பேசிய நாடாளுமன்றத்தில் தந்தை பெரியார் பெயர் நீக்கப்பட்டுள்ளது அவமானம். மக்களின் மனங்களில் நிலைத்து நின்று, வகுப்புவாதிகளை இன்றளவும் அச்சுறுத்தும் தந்தை பெரியாரின் பெயரை எங்கும், எப்போதும், எந்தச் சூழலிலும் பயன்படுத்துவோம். அனைவரும் பயன்படுத்துங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.