‘தவிச்ச வாய்க்கு ஒரு வாய் தண்ணீர் கிடைக்குமா’ என்கிற ஏக்கத்தில் டெல்டா மாவட்டத்தில் கருகும் நிலையில் உள்ள குறுவைப் பயிர்கள் காத்துக் கிடக்கின்றன. பயிர்களைக் காப்பாற்றக் குளம், குட்டைகளிலிருந்து குடத்தில் தண்ணீரைக் கொண்டு தெளிக்கும் அவலமான சூழல் நிலவி வருகிறது. குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து காவிரிப் பாசனப் பகுதிகளுக்கு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்தச் சூழலில் கடைமடைப் பகுதிகளான திருவாரூர், நாகை மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களுக்கு ஒருமுறையும், பல கிராமங்களுக்கு இன்று வரை தண்ணீர் வராமல் இருப்பதுமாக உள்ளது. மேட்டூர் தண்ணீரை நம்பி குறுவை சாகுபடியில் இறங்கிய விவசாயிகள், தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகுவதைக் கண்டு கண்ணீர் வடிக்கின்றனர். இதனால் அரிசி பஞ்சம் ஏற்படும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் இடைத்தரகர்கள் பதுக்கலால் புழுங்கல் அரிசியின் விலை கிலோவிற்கு 30 ரூபாய் வரை உயரும் என அரிசி ஆலை உரிமையாளர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.
இன்று திருவாரூரில் ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்பொழுது சங்கத்தின் நிர்வாகியான முகமது மீரான் பேசுகையில், ''தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, ஒரிசா, வெஸ்ட் பெங்கால் இந்த ஐந்து மாநிலங்களில் மக்கள் அதிகமாக பாயில்டு அரிசி சாப்பிடுவார்கள். இப்பொழுது விளைச்சல் சரியில்லாததால் ஒரு மாதம், இரண்டு மாதத்திலேயே கிலோவிற்கு விலை பதினைந்து ரூபாய் ஏறும். இது 30 ரூபாய் என விலை ஏறிப் போகும். இதில் யாருக்கும் எந்த ஆதாயமும் இல்லை. கார்ப்பரேட் கம்பெனிக்குத் தான் இந்த ஆதாயம். இப்படியே விட்டால் சாமானிய மக்கள் ரொம்ப பாதிக்கப்படுவார்கள். எனவே மாநில அரசு மத்திய அரசிடம் சொல்லி விலையேற்றத்தை தடுப்பதற்கு ஏற்றுமதியை நிறுத்தினால் நன்றாக இருக்கும் என்பது எங்களது கருத்து'' என்றார்.