
காவிரியில் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீரை ஒதுக்கீடு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 14.75 டிஎம்சி நீர் தமிழகத்திற்கு குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியதாவது,
தமிழகத்திற்கு நீர் குறைக்கப்பட்டது வருத்தத்தை தருகிறது. பாஜக இதனை வரவேற்கவில்லை. ஆனால் நெடுநாட்களாக தமிழகத்தை கர்நாடகம் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. 177.25 டிஎம்சி நம்முடைய பங்கு குறைக்கப்பட்டது நமக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது. இதில் நாம் மகிழ்ச்சியடைய ஒன்றும் இல்லை.
தொடர்ந்து நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்க வேண்டும். அதேநேரத்தில் உச்சநீதிமன்றம் ஒதுக்கீடு செய்த 177.25 டிஎம்சி நீரை கர்நாடக அரசு உடனே தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும். எனென்றால், இதற்கு முன்னதாக அளித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை அவர்கள் மதிக்கவில்லை. குறைவாக சொன்னாலும், இந்த உட்சபட்ச அளவை கர்நாடக அரசு நமக்கு கொடுக்க வேண்டும். அதுமட்டுமல்ல, 50 டிஎம்சிக்கு மேல் கர்நாடகா நமக்கு தண்ணீர் வழங்கியதில்லை. அதனால், இன்றைய சூழ்நிலையில் தமிழக அரசு கிடைக்கவேண்டிய தண்ணீரை உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். உட்சபட்ச அளவை கர்நாடக அரசு நமக்கு உடனடியாக கொடுக்க வேண்டும்.
நதிகள் இணைக்கப்பட வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டமும் நம்மிடம் இருக்கிறது. அதனால் நமது உரிமை எந்த விதத்திலும் பரிபோகக்கூடாது. பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.