தமிழக ஆளுநர் 10க்கும் மேற்பட்ட மசோதாக்களைத் திருப்பி அனுப்பியிருந்த நிலையில், நேற்று சட்டப்பேரவை கூடியது. நேற்று கூடிய சிறப்புச் சட்டப்பேரவை கூட்டத்தில் தனி தீர்மானத்தை முன்மொழிந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.
அவரது உரையில், “தமிழக ஆளுநர், தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பி வைத்துள்ளது தமிழ்நாட்டு மக்களையும் இந்த சட்டமன்றத்தையும் ஆளுநர் அவமதிக்கிறார் என்றுதான் பொருள். 10க்கும் மேற்பட்ட மசோதாக்களின் கோப்புகளுக்கு அவர் ஒப்புதல் வழங்காமல் இருப்பது சட்ட விரோதமாகும்; ஜனநாயக விரோதமாகும்; மக்கள் விரோதமாகும்; மனசாட்சி விரோதமாகும். அனைத்துக்கும் மேலாக இந்த சட்டமன்றத்தின் இறையாண்மைக்கு எதிரானதாகும். உச்சநீதிமன்றம் ஓங்கி தலையில் குட்டு வைத்தவுடன் அவசர அவசரமாக கோப்புகளை திருப்பி அனுப்புவதும், சில கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்குவதும் என நாடகமாடுகிறார் ஆளுநர்'' என்றார்.
பாஜக வெளிநடப்பு செய்த நிலையில் ஒருமனதாக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தமிழக அரசால் ஆளுநருக்கு எதிராக தொடரப்பட்டவழக்கில் உச்சநீதிமன்றம் கண்டனங்களையும் வருத்தத்தையும் தெரிவித்திருந்தது. ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளைக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் ஆளுநரின் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.