மனித இனம் உருவாகும்போதே தமிழ் சமூகமும் தமிழ் இலக்கியமும் தோன்றியுள்ளதற்கான பல ஆய்வு ஆதார நிலைகள் தொடர்ந்து வெளிவந்துகொண்டே உள்ளன. எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் ஆகியோர் அமைப்பு ரீதியாக சென்ற நூற்றாண்டில்தான் இணைந்து செயல்பட தொடங்கினார்கள். அப்படி தமிழ் இலக்கியவாதிகளை, எழுத்தாளுமைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்புதான் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். ‘இலக்கிய பேராசான்’ என்றழைக்கப்பட்ட பொதுவுடமை இயக்க தலைவர் ப. ஜீவானந்தம் தலைமையில் இந்த அமைப்பு 1961இல் உருவாக்கப்பட்டது.
மறைந்த பாலதண்டாயுதம், ஜெயகாந்தன், கே.சி.எஸ். அருணாச்சலம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், குன்றக்குடி அடிகளார், தா. பாண்டியன், தொ.மு.சி. ரகுநாதன், தனுஷ்கோடி ராமசாமி, வாய்மைநாதன், தத்துவ ஆய்வாளர் வானமாமலை, தி.க.சி, நாட்டுப்புறக் கலைஞர் கே.ஏ. குணசேகரன், கைலாசமூர்த்தி, ஹைகூ கவிஞர் ரசூல் என நூற்றுக்கணக்கான இலக்கிய ஜாம்பவான்கள் இயங்கிய அமைப்பு, தற்போதும் நாவலாசிரியர் பொன்னீலன் உட்பட பல இலக்கிய தலைமை பண்பு கொண்டவர்களால் இயங்கும் அமைப்பு தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம். தற்போது அதன் 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து வைர விழாவின் தொடக்க நிகழ்ச்சி சென்ற 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை இணையவழியில் நடைபெற்றது.
பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் சி. சொக்கலிங்கம் தலைமை வகிக்க, பொதுச் செயலாளர் முனைவர் இரா. காமராசு வரவேற்றுப் பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன், முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனத்தின் தேசியத் தலைவர் எழுத்தாளர் பொன்னீலன், பெருமன்றத்தின் முதல் செயற்குழுவின் உறுப்பினர் எழுத்தாளர் மு. பழனியப்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ஆய்வாளர் ஆ. சிவசுப்பிரமணியன் சிறப்புரை நிகழ்த்தினார். பெருமன்றத்தின் நிறுவனர் ப. ஜீவானந்தம் உள்ளிட்ட முன்னோடிகளுக்குப் புகழஞ்சலியும் செலுத்தப்பட்டது. மறைந்த பத்திரிகையாளரும் முற்போக்கு எழுத்தாளருமான இரா. ஜவஹர் அவர்களுக்கு மௌன அஞ்சலியும் வீர வணக்கமும் செலுத்தப்பட்டது.
இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 250 பேர் ஜூம் (zoom) செயலி வழியே பங்கேற்றனர். மேலும், ஃபேஸ்புக் பக்கம் மூலம் நேரலையும் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் சில முக்கிய தீர்மானங்களையும் தோழர்கள் நிறைவேற்றினார்கள், அதை அமைப்பின் மாநிலச் செயலாளர் இரா. காமராசு நம்மிடம் கூறினார். அவை “பிற மாநிலங்களில் இருப்பதைப் போல தமிழ்நாட்டிலும் மாநில இலக்கிய அமைப்பு (மாநில சாகித்திய அகாதெமி) ஒன்றை தமிழ்நாடு அரசு நிறுவி, ஆண்டுதோறும் சிறந்த இலக்கிய ஆளுமைகளுக்கு விருது வழங்கிச் சிறப்பிக்க வேண்டும். தற்போது புத்தாண்டின்போது இலக்கியத்தின் பல பிரிவுகளில் வழங்கப்படும் பரிசுகள் தொடர வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அரசு நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்கச் செய்வதற்கு கூடுதல் தொகை ஒதுக்கீடு செய்து பதிப்பகங்கள் வளர்ச்சி அடைய உதவ வேண்டும். இதற்கான நூலக ஆணை நேர்மையான முறையில் வழங்கப்பட வேண்டும்.
கரோனா பெருந்தொற்று காலத்தில் நிகழ்ச்சிகளின்றி வறுமையில் வாடும் அனைத்துக் கலைஞர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட வேண்டும். கல்லூரி, பல்கலைக்கழகங்களில் நிரப்பப்படாமல் இருக்கும் காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும். கிராமப்புற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிராக, பல்கலைக்கழக மானியக் குழு முன்மொழிந்துள்ள நாற்பது விழுக்காடு இணையவழிக் கல்வி மற்றும் பட்டப்படிப்பிற்கு நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் என்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய அறிவிப்பையும் அரசு திரும்பப் பெற வேண்டும். மாநில அரசின் புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மற்றும் நீட் தேர்வு ஒழிப்பு நிலைப்பாட்டைப் பெருமன்றம் வரவேற்கிறது. தமிழ்நாடு அரசின் சமச்சீர் பாடத்திட்டத்திலுள்ள மதச்சார்பின்மைக்கு எதிரான, தவறான பகுதிகளை நீக்க வேண்டும். இப்படி எட்டு தீர்மானங்களை நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம்” என்றார்.
தொன்மையான தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் ஈடற்ற உழைப்பைச் செலுத்திவரும் இலக்கிய ஆளுமைகளின் அமைப்புகள் தொடர்ந்து பயணிக்க வேண்டும்.