சிதம்பரத்தில் இட ஒதுக்கீடு உரிமை இயக்கத்தின் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அழகப்பன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் பிரபுதாஸ், கொள்கை பரப்பு செயலாளர் அருள் முத்துக்குமரன், தலைமை நிலைய செயலாளர் பாலசிங்கம், மாநில ஊடகப்பிரிவு செயலாளர் நலங்கிள்ளி, மாநில பொது செயலாளர் பழனிவேல் ராஜன், ஆறுமுகம், வைத்திலிங்கம், சண்முகராஜா, மாநில செயலாளர் புகழேந்தி, தமிழரசன், ஆனந்த கிருஷ்ணன், கபிலர், சண்முகராஜன் உள்ளிட்ட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இதில் இயக்கத்தின் நடவடிக்கை மற்றும் எதிர்கால பணிகள் குறித்து விளக்கமாக பேசினார்கள்.
இதில் தமிழக அரசு அந்தியர்களுக்கு வழங்கிய உள் ஒதுக்கீடு ஆணையினை நீக்கும் வரை அதற்கான தீவிர களப்பணியாற்றுவது, 2021 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பட்டியல் இன மக்களுக்கான இட ஒதுக்கீட்டு அளவினை உயர்த்தி வழங்கவேண்டும், பட்டியல் இன மக்களை அணி திரட்டுவதற்கு முழுமையாக பணியாற்றுவது, பட்டியல் இன மக்களின் சிறப்பு உட்கூறு திட்டம் மற்றும் சிறப்பு திட்டங்கள் நடைமுறைகள் தொடர்பான வெள்ளை அறிக்கைகளை பெறுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வது, தனியார் துறையில் பட்டியல் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்கிட மத்திய மற்றும் மாநில அரசுகள் சட்டம் இயற்றும் வரை அதற்கான தொடர்ந்து களப்பணியாற்றுவது.
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திட மத்திய மற்றும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டியல் இன மாணவர்கள் முற்றிலுமாக இலவச கல்வியை பெறுவதற்கு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.