கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் தற்காலிகமாக கரோனா சிகிச்சைக்கான மருத்துவமனை அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விருத்தாசலம் மாவட்ட விழிப்புணர்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் தங்க.தனவேல் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார். அம்மனுவில் கூறியிருப்பதாவது,
"திருமுதுகுன்றம் என்ற பெயர் கொண்ட விருத்தாசலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்பொழுது நிலவிவரும் கரோனா வைரஸ் தாக்குதலில் 'பாசிட்டிவ்' உள்ள நோயாளிகள் கடலூருக்கும், சிதம்பரத்திற்கும் கொண்டு சென்று சிகிச்சை அளிக்கின்றனர்.
கடலூர் மாவட்டத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள விருத்தாசலத்தில் பீங்கான் தொழிற்சாலைகள், கல்லூரிகள், ஒழுங்குமுறை விற்பனை கூடம், பள்ளிகள், முக்கிய ரயில் சந்திப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன.
இந்நிலையில் விருத்தாசலத்தில் பெயரளவிலேயே ஒரு அரசு மருத்துவமனை இருக்கிறது. இந்த அரசு மருத்துவமனையில் சாதாரண சளி, ஜுரத்திற்குகூட அதிக மக்கள் வருவதால் மருத்துவமனை முழுவதும் நிரம்பி வழிகிறது.
கடலூர் மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள சிறுப்பாக்கம், மங்களூர், வேப்பூர், கழுதூர், தொழுதூர் போன்ற பகுதிகளிலிருந்து கடலூர் செல்ல வேண்டுமென்றால் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஆகிறது. இது அரசுக்கு வீண் செலவுதான். மேலும் ஆம்புலன்ஸ் செல்வது, ஆட்சியர்கள் மேற்பார்வைக்கு செல்வது, வருவாய் அதிகாரிகள் பணிக்கு செல்வது போன்றவற்றினால் அரசுக்கு செலவும், நேர விரயமும்தான் அதிகம். எனவே விருத்தாசலத்தை மையமாக வைத்து ஒரு பெரிய தற்காலிக மருத்துவமனை அமைத்து கரோனா பரிசோதனை மையமும், அதற்கு சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையையும் இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று அமைத்து தரும்படி இப்பகுதி மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.