ஜவுளி, மற்றும் மஞ்சள் நகரமான ஈரோட்டில் சுமை பணியாளர்களின் வேலை மிக முக்கியமானது. இந்த நிலையில் இன்று பவானி சாலையில் நூற்றுக்கணக்கான சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஒன்று திரண்டனர். இதற்கு டி.பி.டி.எஸ் என்ற அ.தி.மு.க. சுமை தூக்குவோர் சங்கத்தின் தலைவரும் முன்னாள் மாநகர செயலாளருமான பெரியார் நகர் மனோகரன் தலைமை தாங்கினார்.
மாவட்ட சுமை பணியாளர்கள் சங்க தலைவர் தங்கவேல், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் தெய்வநாயகம், ஈரோடு மத்திய மாவட்ட சங்க தலைவர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் தொழிலாளர்கள் பேரணியாக புறப்பட்டு கந்தசாமி வீதி, கிருஷ்ணா தியேட்டர் ,மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோவில் வீதி, காமராஜர் வீதி, மீனாட்சிசுந்தரனார் சாலை வழியாக ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு வந்து நின்று திடீர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் ரெகுளர் லாரி நிறுவனங்களில் சுமைப்பணி செய்யும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும் என்றும் சுமை தூக்கும் பணியாளர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் எனவும் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதன் நிர்வாகிகள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனுவும் கொடுத்தனர்.
ஆட்சியில் உள்ள கட்சி நீங்களே போராடலாமா? என நிருபர்கள் கேட்டதற்கு இந்த அரசு எங்க கோரிக்கையை கண்டுகொள்ளவே இல்லை. அமைச்சர்கள் பெரு முதலாளிகளுக்கு சாதகமாக நடக்கிறார்கள் அதனால் தான் போராடுகிறோம் என்றனர்.