திண்டுக்கல்லில் உள்ள கோவிந்தாபுரம் துரைராஜ் நகரில் சைவ பெருமக்கள் பேரவை சார்பாக புதிய திருமண மண்டபம் கட்டப்பட்டது. இந்த திருமண மண்டபத்தை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். இதில் வ.உ.சி. பேரனான வ.உ.சி.வா.சிதம்பரம்பிள்ளை, மாநில சைவ வேளாளர் சங்கத் தலைவர் சொங்கலிங்கம்பிள்ளை, பொதுச் செயலாளர் கனகசபாபதி, சைவ பெருமக்கள் பேரவையின் அறங்காவலர் பி.எம்.எஸ்.வெங்கடேசன், மாநகர மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் இல.கண்ணன், மாநில பொருளாளர் செண்பகம்பிள்ளை, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்டத் தலைவர் சம்மந்தம், கோமதிநாயகம், பத்மநாதன், கவுன்சிலர்கள் நெல்லை சுபாஷ், ஜானகிராமன் ஆகியோர் வரவேற்றனர். இதில் அந்த சமூக மக்களும், விஐபிக்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர். 1971ல் முதன் முதலில் திண்டுக்கல் மாநகரில் இந்த சைவ பெருமக்கள் சார்பில் கல்யாண மண்டபம் கட்டப்பட்டது. அதன்பின் 53 வருடங்களுக்குப் பிறகு அதை இடித்துவிட்டு புதிதாக நவீன ஏர்கண்டிசனர் வசதிகளுடன் கட்டப்பட்டு இருக்கிறது.
இந்த திறப்பு விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, “இந்த சமூக மக்கள் கல்வி, பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உயர்ந்த பதவிகளில் உயர்ந்து வருகிறார்கள். அதுபோல் அரசியலிலும் பல பதவிகளில் இருந்து இருக்கிறார்கள். 1967ல் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் டி.வி.எஸ். சுந்தரம்மாள் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அன்புச்செழியன் போட்டியிட்டு அதிக ஓட்டு வாங்கியதின் மூலம் தமிழகத்திலேயே முதல் இடத்தை பிடித்தார். அதுபோல் தொடர்ந்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி தமிழகத்திலேயே முதல் இடத்தைத் தான் பிடித்து வருகிறது. கடந்த தேர்தல் போலவே இந்த தேர்தலிலும் பிடித்து இருக்கிறோம்.
இதில் எனக்கு முன்பு பேசிய மாநிலத் தலைவர் சொக்கலிங்கம்பிள்ளை இடஒதுக்கீடு வேண்டும் என்று வலியுறுத்தினார். அதுபோல் எங்க சமூக மக்களும் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத்தான் ஆதரவு அளித்து வருவதாகவும் கூறினார். அதை நான் மறுக்கவில்லை. நான் முதன்முதலில் வத்தலக்குண்டு பேரூராட்சி சேர்மன் பதவிக்கு போட்டியிட்ட போது எனக்கு எதிராக எம்.ஜி.ஆரே வந்து பிரச்சாரம் செய்துவிட்டு போனார். அப்படியிருந்தும் நான் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் சுப்ரமணியபிள்ளை எனக்காக இரவு பகல் பாராமல் கட்சிக்காரர்களுடன் இணைந்து செயல்பட்டதின் மூலம் தான் வெற்றி பெற்றேன். அந்த நன்றியை இன்றுவரை நான் மறக்கவில்லை. அதுபோல் உங்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு இருக்கிறீர்கள். அதை முதல்வரிடம் நிச்சயமாகப் பேசி உங்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க முயற்சி செய்கிறேன்” என்று கூறினார்!