செரியலூர், கீழாத்தூர், உள்பட அரசு நடுநிலைப் பள்ளிகளில் கடந்த 6 ஆண்டுகளாக காலியாக உள்ள 6 தலைமை ஆசிரியர் பணியிடங்களை நீதிமன்ற உத்தரவுப்படி உடனே நிரப்ப வேண்டும் என்று பெற்றோர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலைமை ஆசிரியர் காலியிடங்கள் :
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள செரியலூர், கீழாத்தூர், கைக்குறிச்சி, கத்தக்குறிச்சி, ந.கொத்தமங்கலம், பாத்தம்பட்டி ஆகிய 6 ஊர்களில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளில் கடந்த 5 ஆண்டுகளாக படிப்படியாக தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியானது. இந்த பணியிடங்கள் கடந்த பல ஆண்டுகளாக முதல் காலியாக உள்ள நிலையில் இன்னும் அந்த இடங்களுக்கு தலைமை ஆசிரியர்கள், நிரப்பபடாததால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் நடுநிலைப்பள்ளி மாவட்டத்தின் சிறந்த பள்ளியாகவும், ஏ கிரேடு பள்ளியாகவும் உள்ளது. மேலும் இந்த பள்ளி மாணவ, மாணவிகள் கல்வித் தரத்தில் சிறந்து விளங்குவதால் உயர்நிலை, மற்றும் மேல்நிலைக் கல்விகளில் முதல் 3 சிறப்பிடங்களை பல்வேறு பள்ளிகளில் படித்து சாதனை படைக்கும் மாணவர்களாக உள்ளனர்.
பள்ளி மாணவர்களுக்கு மேலும் பல்வேறு தகுதிகளை வளர்ப்பதற்காக எழுத்து பயிற்சி, ஸ்போகன் இங்கிலீஸ் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை பெற்றோர்களும் தன்னார்வளர்களும் முன்வந்து வழங்கியுள்ளனர். இப்படிப்பட்ட பள்ளியில் தலைமை ஆசிரியர் இல்லை என்பது வேதனையானது. இதுவரை வழக்கு உள்ளது என்ற காரணத்தை சொல்லி தலைமை ஆசிரியர் பணயிடங்கள் நிரப்பபடாமல் இருந்தது. ஆனால் கடந்த வாரம் தலைமை ஆசிரியர்கள் நியமனம் செய்வதில் தடையில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் 6 பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளது.
போராட்டம் நடத்த முடிவு :
இந்த நிலையில் செரியலூர் நடுநிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் செரியலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 5 ஆண்டுகளாக காலியாக உள்ள தலைமை ஆசிரியர் காலியிடத்தை நிரப்ப வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
இது குறித்து இந்த பள்ளி மாணவர்கள், முன்னால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறும் போது.. கடந்த 5 ஆண்டுகளாக தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளதால் மாணவர்களின் படிப்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறையும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. அதனால் நீதிமன்ற உத்தரவுப்படி தலைமை ஆசிரியர் கலந்தாய்வை நடத்தி காலிப் பணியிடங்களை அதிகாரிகள் உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் இந்த பணியிடங்கள் நிரப்பபடாத நிலையில் மாணவர்கள், பெற்றோர்கள் இணைந்து போராட்டங்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.
இது வரை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என்று திருவரங்குளம் ஒன்றியத்தில் மட்டும் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் காலிப் பணியிடம் நிரப்பபடாமல் உள்ளது. இனிமேலாவது மாவட்ட, ஒன்றிய நிர்வாகம் தலையிட்டு முடிவுக்கு கொண்டு வந்தால் அரசுப்பள்ளி மாணவர்களின் எதிர்காலம் சிறக்கும்.