ஜெயலலிதா இறந்ததற்கு பின்னால் அவருக்கு பிடித்தமான கொடநாடு பங்களாவில் கொள்ளை அடிக்க முயன்றது 11 பேர் கொண்ட கும்பல். அந்த கொள்ளை முயற்சியை தடுக்க முயன்ற பங்களா காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டான். இன்னோரு காவலாளி கிருஷ்ண பகதூர் பயங்கரமாய் தாக்கப் பட்டான்.
இந்த நிலையில் கொலையாளிகள் யார்? என போலீஸ் விசாரித்துக் கொண்டிருக்கும்போது தான் சயான், மனோஜ் என்கிற இரண்டு பேர் முக்கியக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டார்கள். அந்த சயானும், மனோஜூம் தான் எங்களை கொள்ளை அடிக்கச் சொன்னதே எடப்பாடி பழனிச்சாமி தான் என சொல்லியபோது அதிர்ந்து விட்டது தமிழகம்.
முக்கிய குற்றவாளிகளான சயான், மனோஜ் ஆகியோர் கடந்த 21ந் தேதி ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது சயான், பணம் பத்தும் செய்யும் பதவி பதினொண்ணும் செய்யும் எனச் சொல்ல, மனோஜோ இந்த கொலைக்கு முக்கியக் காரணம் சஜீவன் தான் அவனைப் பற்றி அடுத்த வாய்தாவுக்கு வரும் போது சொல்கிறேன் என சொல்லிப் போனான்.
நக்கீரன் அப்போதிருந்தே இந்த கொடநாடு கொலை வழக்கில் சூத்ரதாரியாக செயல் பட்டவன் சஜீவன் தான் என சொல்ல, அதை நிரூபிக்கும் விதமாக மனோஜூம் சஜீவன் தான் இந்த கொலையில் முக்கியமானவன் எனச் சொல்ல நக்கீரன் கூற்று உண்மையாகிப் போனது.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 10 பேரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று ஊட்டி நீதி மன்றம் உத்தரவு இட்ட நிலையில் 11 மணிக்கு ஆஜர் படுத்த முடியவில்லை போலீசாரால். உடனே மதியம் 3 மணிக்குள் எல்லோரையும் ஆஜர் படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவு இட்டிருக்கிறார். 3 மணியை நோக்கி இருந்தது கொடநாடு கொலை - கொள்ளை வழக்கு.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரில் கோவை மத்திய சிறையிலுள்ள சயான், வாளையார் மனோஜ், இரண்டு பேர் மற்றும் ஜம்சிர் அலி,மனோஜ் சாமி ஆகிய நான்கு பேர் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து. ஆஜராகாத 6 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்ட நீதிபதி வடமலை, வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 3ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.