நாட்டின் 75வது குடியரசு தின விழா இன்று (26.01.2024) கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாகத் தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள உழைப்பாளர் சிலை அருகில் இன்று காலை 8 மணியளவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றக்கொண்டார். இந்த குடியரசு தின நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு விருதுகளையும், பதக்கங்களையும் வழங்கி கவுரவித்தார். அந்த வகையில் மதுரையில் அரசுப் பள்ளி கட்டுவதற்காகத் தனது 7 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அரசுக்கு நன்கொடையாகக் கொடுத்த ஆயி அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது. ஊடகவியலாளர் ஆல்ட் நியூஸ் முகமது ஜுபைருக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் வழங்கப்பட்டது. இவர் சமூக ஊடகங்களில் வரும் செய்தியின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து உண்மையை வெளியிடுபவர். பொய்யான செய்தியால் சமூகத்தில் ஏற்படும் வன்முறைகளைத் தடுக்க முகமது ஜுபைரின் பணி உதவி செய்கிறது எனத் தமிழ்நாடு அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் முதல் பரிசை மதுரை மாநகரம் காவல் நிலையம் பெற்றது. 2வது பரிசை நாமக்கல் காவல் நிலையம் பெற்றது. 3ஆம் பரிசை பாளையங்கோட்டை காவல் நிலையம் பெற்றது. இதற்கான கோப்பையை சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் முதல்வரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.
மேலும் மதுவிலக்கு அமலாக்கப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றிய காவலர்களுக்குக் காந்தியடிகள் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கோ. சசாங்சாய், சென்னை தெற்கு மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் ப. காசி விஸ்வநாதன், ஆவடி காவல் ஆணையரக செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் கா.மு. முனியசாமி, மதுரை மண்டல மத்திய பிரிவு காவல் உதவி ஆய்வாளர் அ. பாண்டியன் மற்றும் இராணிப்பேட்டை அயற்பணி மத்திய நுண்ணறிவு பிரிவைச் சேர்ந்த ராணிப்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலர் ஜெ. ரங்கநாதன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இவ்விருதுடன் பரிசுத் தொகையாக 40 ஆயிரம் ரூபாய் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியரின் கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் நடைபெற்றன.