Skip to main content

பாலியல் வீடியோ வெளியிடாமல் இருக்க மருத்துவரிடம் பணம் கேட்டு மிரட்டிய நிருபர்கள்!

Published on 24/09/2024 | Edited on 24/09/2024
Reporters who threatened the doctor for money not to publish video

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் தென்கரை வடக்கு அக்ரகாரம் தெருவில் குடியிருப்பவர் மருத்துவர் அனுமந்தன். இவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். அதுபோல் மருத்துவர் அனுமந்தன் தனக்கு சொந்தமாகப் பெரியகுளம் தென்கரை கச்சேரி ரோட்டில் அம்மா ராமசாமி  என்ற பெயரில் கிளினிக் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நிருபர்கள் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்  மருத்துவர் அனுமந்தன், புகார் மனு அளித்துள்ளார். அந்த புகாரில், கடந்த வாரத்தில்  பெரியகுளத்தைச் சேர்ந்த நிருபர்கள் சின்னத்தம்பி,  ஆனந்தன், கார்த்தி, அழகர்சாமி,  ராஜா முத்து,  அழகர் ஆகிய ஆறு பேரும்  மருத்துவர் அனுமந்தனின் தனியார் க்ளினிக்கிற்கு சென்று தாங்கள் அனைவரும் நிருபர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டு, அனுமந்தனிடம், “உங்களது கிளினிக்கில் வேலை பார்க்கும் பல பெண்களை பாலியல் ரீதியாக நீங்கள் தொந்தரவு செய்துள்ளீர்கள். அதற்கான வீடியோ ஆதாரம் எங்களிடம் உள்ளது. அவர்கள் அனைவரும் உங்கள் மீது புகார் கொடுக்க தயாராக உள்ளனர். அவர்களுக்கும் நாங்கள் பங்கு கொடுக்க வேண்டும். இந்த வீடி யோவை வெளியிட விடாமல் சரி கட்ட வேண்டும் என்றால் எங்களுக்கு ரூபாய் 25 லட்சம் கொடுக்க வேண்டும்” என மிரட்டி பணம் கேட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நல்லூச்சாமி விசாரணை செய்தார். அதனைத் தொடர்ந்து, பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் நிருபர்கள் சின்னத்தம்பி, ஆனந்தன், கார்த்தி, அழகர் சாமி, ராஜா முத்து, அழகர் ஆகிய ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே தலைமறைவாக இருக்கும் 6 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் தேனி மாவட்டத்தில் உள்ள பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

சார்ந்த செய்திகள்