திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்களின் பற்களைப் பிடுங்கி, உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மற்றும் காவல்துறையினர் துன்புறுத்தியதாகச் சமூக ஊடகங்களில் வெளியான புகார்கள் தொடர்பாக முதலில் சார் ஆட்சியர் விசாரணை, பிறகு ஆட்சியர் விசாரணை என நடந்தது. அதன் பின்னர் அப்போதைய அரசு முதன்மைச் செயலாளர் அமுதா விசாரணையை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
அதே சமயம் பல்வீர் சிங் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார். இதுகுறித்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் ஆயுதத்தைப் பயன்படுத்தி கொடுங்காயம் ஏற்படுத்துதல், சித்திரவதை செய்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கான இந்திய தண்டனைச் சட்டத்தின் மூன்று பிரிவுகளில் 4 வழக்குகள் பல்வீர்சிங் மீது பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்குகள் அனைத்தும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நெல்லை நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இந்தநிலையில் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரி பலவீர் சிங் உள்ளிட்ட நான்கு பேர் இன்று ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் பலவீர் சிங் உட்பட நான்கு பேரும் ஆஜராகவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று பலவீர் சிங் ஆஜராகாத நிலையில் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.