தூத்துக்குடி மாவட்டம் தொழில்கள் நிறைந்த கோவில்பட்டி நகரின் மேல் பகுதியிலிருக்கும் கதிரேசன் மலை மற்றும் சுற்றுவட்டாரங்களில் பெய்கிற மழையின் நீர் அங்கிருந்து நீர் நிலைக்கால்வாய் மூலம் ஏ.கே.எஸ்.தியேட்டர் வழியாக வந்து நகரின் கீழ்பகுதி வழியாகச் சென்று அப்பகுதி குளத்தை நிரப்பிவிட்டுப் பின்பு வைப்பாறில் கலக்கிறது. நகருக்குள் வருகிற இந்த நீர் நிலைக் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் கட்டப்பட்டதால் ஆக்கிரமிப்பு காரணமாக கால்வாய் அடைபட்டதால் நீர் போக வழியின்றி தேங்கி நகரம் மழைக்காலங்களில் வெள்ளக்காடாகி மக்களின் வாழ்க்கை முடங்குமளவுக்குப் போயிருக்கிறது.
கடைகளை அகற்றக்கோரி 5-வது தூண் அமைப்பின் தலைவர் சங்கரலிங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 70 வருடங்களாக ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் கட்டப்பட்டதை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் வியாபாரிகள் தரப்பில் இதனை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டது. அரசியல் கட்சியினரும் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி போராட்டம் நடத்தினர். மழைநீர் வெளியே செல்ல முடியாமல் தேங்கியது. தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து இன்று 108 கடைகளை அகற்றும் பணி காலையில் தொடங்கியது. நகராட்சிப் பணியாளர்கள் வருவாய் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக 13 ஜே.சி.பி. இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. பதற்றமான சூழலில் பாதுகாப்பின் பொருட்டு நகர டி.எஸ்.பி. கலைக்கதிரவன், இன்ஸ்பெக்டர் சுதேசன், அய்யப்பன் உள்ளிட்டவர்கள் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதனை மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அகற்றப்பட்ட வியாபாரிகளின் கடைகளுக்கு மாற்று ஏற்பாடாக உரிய இடம் கண்டறியப்பட்டு அமைத்துக் கொடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் கடம்பூர் ராஜ்.