சட்டவிரோதமாக ‘ரெம்டெசிவர்’ மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்த அண்ணன், தம்பி ஆகிய இருவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது மாவட்டக் காவல்துறை. நுண்கிருமி பெருந்தொற்று நோயான கரோனாவுக்குப் பயன்படுத்தப்படும் அத்தியாவசியமான மருந்தான ரெம்டெசிவர் மருந்தை அரசு நிர்ணயித்த விலையைவிட, அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பவர் மீது நடவடிக்கை பாயும் என அரசு அறிவித்துள்ளது.
இவ்வேளையில், கடந்த 13.05.2021 அன்று தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கதிரேசன் கோவில் சாலையிலுள்ள மீனாட்சி மருந்துக்கடையில் ரெம்டெசிவர் மருந்தை அதிக விலைக்கு விற்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பின்னர் போலீஸார் சோதனையிட்டபோது, அங்கு கணக்கில் காட்டப்படாத 46 ரெம்டெசிவர் மருந்து பாட்டில்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் மருந்து பாட்டிலுள்ள விலை அழிக்கப்பட்டு கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவர, மருந்துக்கடையின் உரிமையாளரான கணேசன், சண்முகம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சபாபதி, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஜெயகுமாருக்கு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், எஸ்.பி. இரு நபர்களையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார். இதனடிப்படையில் மருந்துக்கடையின் உரிமையாளர்கள் இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.