கூகுள் மேப் பொய் சொல்லாது என நம்பிய கோவை மாணவி, கடைசியில் டிஎன்பிஎஸ்சி தேர்வை எழுதாமல் ஏமாற்றம் அடைந்த சம்பவம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு கடந்த சனிக்கிழமையன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. 33 தேர்வு மையங்களில் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு, கோவை பீளமேடு பகுதியிலுள்ள நேஷனல் மாடல் பள்ளியிலும் நடைபெற்றது. இந்த மையத்தில் 45 அறைகளில் 900 தேர்வாளர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வை எழுத இருந்தனர்.
இந்நிலையில், கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்பவர், நேஷனல் மாடல் பள்ளியில் குரூப்-1 தேர்வை எழுதக் கிளம்பியுள்ளார். அப்போது, வடவள்ளி பகுதியிலிருந்து தேர்வு மையத்துக்கு வழி தெரியாத ஐஸ்வர்யா, கூகுள் மேப்பை பயன்படுத்தியுள்ளார். ஆனால், அவரது கெட்ட நேரம் நேஷனல் மாடல் பள்ளி அவிநாசி சாலையில் உள்ளது எனத் தவறான முகவரியைக் காண்பித்துள்ளது. இதையடுத்து, அவிநாசி சாலைக்குச் சென்ற ஐஸ்வர்யா, தேர்வு மையம் அங்கில்லை எனத் தெரிந்தவுடன், பதட்டத்தில் அங்குமிங்கும் சுற்றித் திரிந்துள்ளார்.
ஒருவழியாக நேஷனல் மாடல் பள்ளியைக் கண்டுபிடித்த ஐஸ்வர்யா, தேர்வு மையத்துக்குள் ஐந்து நிமிடம் தாமதமாக வந்துள்ளார். அவர் 9.05 மணிக்கு வந்ததால், குரூப்-1 தேர்வை எழுதுவதற்கு, அங்கிருந்த அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த ஐஸ்வர்யா, உடனடியாக கலெக்டர் அலுவலகத்திற்கு செல்போன் மூலம் புகார் அளித்துள்ளார். ஆனால், அவர்கள், தாசில்தாரிடம் புகார் தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, தாசில்தார் அலுவலக அதிகாரிகளிடம் பேசியபோது, தாமதமாக வந்ததால் தேர்வெழுத அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஐஸ்வர்யா கூறும்போது, “கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இந்த குரூப்-1 தேர்வுக்கு, நான் தயாராகிக் கொண்டிருந்தேன். ஆனால், பள்ளி நிர்வாகம், கூகுள் மேப்பை அப்டேட் செய்யாததால், எனது வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. மற்ற மையங்களில் தேர்வு எழுத வந்தவர்கள், 9.30 மணி வரை அனுமதிக்கப்பட்ட நிலையில், தாமதமாக வந்ததால் தான் அனுமதிக்கப்படாதது வருத்தமளிக்கிறது என தேர்வு எழுத வந்த ஐஸ்வர்யா சோகத்துடன் தெரிவித்தார்.