சென்னை எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய்க் கழிவுகள் சுமார் 20 சதுர கிலோ மீட்டர் தூரத்திற்கு படர்ந்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு படர்ந்திருக்கும் எண்ணெய்க் கழிவுகளை அகற்றவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து தாமாக முன்வந்து தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தரும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. எண்ணூர் கழிமுகத்தில் கலந்த எண்ணெய் கலவையில் அதிக அளவில் ஃபீனால் மற்றும் கிரீஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது கச்சா எண்ணெய்யாக அல்லது சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களாக இருக்கலாம் என தெரிய வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் மாதிரிகளை ஆய்வு செய்த பொழுது ஒரு லிட்டருக்கு 48 கிராம் அளவிற்கு ஃபீனால் இருப்பது தெரியவந்துள்ளது. 10 கிராமில் ஒரு கிராம் அளவிற்கு பெட்ரோலிய பொருட்கள் இருப்பதும், ஒரு லிட்டரில் 728 மில்லி கிராம் அளவிற்கு பெட்ரோலிய பொருட்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இதனிடையே எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள், வலியுறுத்தல்கள் எழுந்தது. இந்நிலையில் எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 12,500 ரூபாயும், எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுக்கு தலா 10,000 ரூபாயும் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே மிக்ஜாம் புயலால் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத் தகுந்தது.