Skip to main content

கொலையா? தற்கொலையா? - குற்றவாளியை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்

Published on 11/03/2022 | Edited on 11/03/2022

 

Relatives stir to arrest culprit!

 

கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல் மகன் அபிசுந்தர்(17). 9ஆம் தேதி காலை 8:45 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் பகல் 11:00 மணியளவில் அப்பகுதியிலுள்ள விவசாய கிணற்றில் அபிசுந்தர் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது அப்பா பழனிவேல் கொடுத்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் இறந்த அபிசுந்தரின் உறவினர்கள் மற்றும் பூலாம்பாடி கிராம மக்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் அபிசுந்தரை கொலை செய்ததாக கூறி, கொலை  குற்றவாளிகளைக் கைது செய்ய கோரி வேப்பூர் பஸ் நிலையம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வேப்பூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு கிராம மக்களிடம் சமரச பேச்சில் ஈடுபட்டார். அதனை ஏற்க மறுத்த இறந்த வாலிபரின் உறவினர்கள் 4 பேர், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். உடனே சுதாரித்த போலீசார் வாசுதேவன், தென்னெழிலன் இருவரும் அவர்களை தடுத்து உடலில் தண்ணீரை ஊற்றினர்கள். 

 

பின்னர் சம்பவ இடத்திற்கு  வந்த திட்டக்குடி டி.எஸ்.பி., சிவா, பூலாம்பாடி  கிராம மக்களிடம் சமரசப் பேச்சில் ஈடுபட்டார். ஆனால் கிராம மக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீசார் கிராம மக்களை வலுக்கட்டாயமாக சாலையிலிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் கிராம மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே  மோதல் ஏற்படும் சூழல் நிலவியது.

 

Relatives stir to arrest culprit!

 

அதனைத் தொடர்ந்து வேப்பூர் வந்த ஏ.டி.எஸ்.பி., அசோக்குமார், விருத்தாசலம் ஆர்.டி.ஓ ராம்குமார் ஆகியோர் கிராம மக்களிடம் சமரசப் பேச்சில் ஈடுபட்டனர். அதில், கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தனர். அதையடுத்து கிராம மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

 

இந்தச் சாலை மறியலால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார்  2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கபட்டு, 10 கிலோ மீட்டர் தூரம்வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால், வேப்பூர் பகுதியில் பரபரப்பு நிலவியது.

 

இதனிடையே, பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த அபிசுந்தர் இறப்பு வழக்கில், அதே கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் மீது சந்தேகமடைந்து வேப்பூர் காவல் நிலையத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்