சிறையில் உள்ள கைதிகளை, அவர்களின் உறவினர்கள் ஜன.14ஆம் தேதி முதல் நேரில் சந்தித்துப் பேச அனுமதி அளித்து, தமிழக சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவியதை அடுத்து, கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வந்தது. சமூக இடைவெளி கடைப்பிடித்தலையும், முகக்கவசம் அணிதலையும் அரசு கட்டாயப்படுத்தியது.
இதையடுத்து நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக, மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை அவர்களுடைய உறவினர்கள் நேரில் சந்தித்துப் பேசவும் தடை விதிக்கப்பட்டது. அதேநேரம், செல்ஃபோன் வீடியோ அழைப்புகள் மூலமாக கைதிகளுடன் பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
வீடியோ அழைப்புகள் மூலம் ஒவ்வொரு கைதிக்கும் தலா 6 நிமிடங்கள் பேச அனுமதிக்கப்பட்டது. இந்த வசதி அனைத்து மத்திய சிறைகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனாலும், மாவட்ட மற்றும் கிளைச்சிறைகளில் உள்ள கைதிகளை உறவினர்கள் சந்திக்க முடியாத நிலை இன்னும் இருக்கிறது.
தற்போது கரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், உறவினர்களை நேரில் சந்திக்கப் பேச அனுமதிக்க வேண்டும் என கைதிகள் அதிகாரிகளிடம் தொடர்ந்து முறையிட்டனர். இதையடுத்து, வரும் பொங்கல் (ஜன.14) முதல் கைதிகளை உறவினர்கள் சந்தித்துப் பேச அனுமதி வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறியது: “சிறையில் உள்ள கைதிகளைப் பார்க்க, வரும் 14ஆம் தேதி முதல் அவர்களுடைய உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தினமும் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை பார்க்கலாம். ஒரு கைதியைச் சந்திக்க, ஒருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். ஒரு நாளைக்கு 75 கைதிகள் மட்டுமே உறவினர்களைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதற்காக, ஒரு தொலைபேசி எண் வழங்கப்படும். அந்த எண்ணில் முன்பதிவு செய்துகொள்ளலாம். 24 மணி நேரத்திற்கு முன்பே, பதிவு செய்துகொள்ள வேண்டும்.
அந்தந்தக் கிளைச்சிறைகளில் உள்ள வசதிகளுக்கு ஏற்ப, கைதிகளைச் சந்தித்துப் பேச உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்படும். கரோனா பரவலைத் தடுக்கும் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முகக்கவசம் அணிந்து வருவதுடன், கைகளை நன்றாக கழுவிய பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.” இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.