போலி பத்திரப்பதிவில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கும் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேறியது.
ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்படும் சொத்துகளை ரத்து செய்வதற்கான அதிகாரம் இல்லாத சூழலில், 1908ஆம் ஆண்டின் பதிவு சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவை வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். போலியான ஆவணம் மற்றும் ஆள்மாறாட்டம் மூலம் பதிவு செய்யப்படும் சொத்து பத்திரங்களைப் பதிவாளர் மற்றும் பத்திரப்பதிவு தலைவர் ரத்து செய்வதற்கு அதிகாரம் வழங்கும் வகையில் உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, இந்தச் சட்ட மசோதா கொண்டுவரப்படுவதாக மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போலி பத்திரப்பதிவில் ஈடுபடும் பதிவுத்துறையைச் சேர்ந்த சார்பதிவாளர் மற்றும் அலுவலர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை (அல்லது) அபராதம் (அல்லது) சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம் என்றும் மசோதாவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ஆளுநரின் ஒப்புதலுக்காக, இந்த மசோதா அனுப்பிவைக்கப்படும். இந்த சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், உடனடியாக நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.