பொங்கலை ஒட்டிய விடுமுறை நாட்கள் முடிந்து அடுத்த வேலை நாளான 18.01.2024 முதல் 31.01.2024 வரையிலான காலத்தில் அனைத்து வேலை நாட்களிலும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதலாகப் பதிவு டோக்கன்கள் வழங்குமாறு வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 டோக்கன்களும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 டோக்கன்களும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் 12 தட்கல் டோக்கன்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்த்தப்பட்டும் ஆவணப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பதிவுத்துறையின் ஆவணப் பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ தை பொங்கலுக்கு பின்வரும் நாட்களில் பதிவுத்துறையில் அதிக பதிவுகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் 31.01.2024 வரை அனைத்து வேலை நாட்களிலும் கூடுதலான டோக்கன் வழங்க உத்தரவிடப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில் நேற்றைய தினம் மட்டும் அதாவது 22.01.2024 அன்று மட்டும் 21,004 ஆவணங்கள் பதியப்பட்டது.
அதன் மூலம் அரசுக்கு 168.83 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. புதிய கூட்டு மதிப்பின் அடிப்படையின் கீழ் 22.01.2024 அன்று சென்னையில் பதியப்பட்ட 137 அடுக்குமாடி குடியிருப்பு பதிவுகளும் அதன்மூலம் பெறப்பட்ட ரூபாய் 12 கோடி வருவாயும் இதில் அடங்கும். இனி வரும் நாட்களிலும் பதிவுகள் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.