2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.தொடர்ந்து பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 09.05.2024 அன்று விஜயகாந்துக்கு விருது வழங்கப்பட்டது.
நேற்று சென்னை வந்த பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்களின் வரவேற்புடன் விஜயகாந்தின் நினைவிடத்தில் விருதினை வைத்து மரியாதை செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், ''இந்தப் புகழ், இந்த விருது எல்லாமே விஜய்காந்தையே சேரும். இதே விஜயகாந்த் அங்கே இருந்திருந்தால் கதர் வேட்டி, கதர் சட்டை போட்டுக்கொண்டு நெற்றி நிறைய திருநீறு வைத்துக்கொண்டு தமிழர்களின் பண்பாட்டை அங்கு நிலைநாட்டி அந்தப் பெருமைக்குரிய விருதை வாங்கி இருந்தால் அது மிகப்பெரிய வரமாக இருந்திருக்கும். ஆனால் காலம் தாழ்ந்து கிடைத்தாலும் அந்த விருதை நாங்கள் தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறோம். அந்த விருதை வழங்கிய மத்திய அரசுக்கு மீண்டும் நன்றிகளை சொல்கிறேன்'' என தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி கூட்டம் கூட்டியதாக தேமுதிகவினர் மீது 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் பெருமளவு கூட்டத்தை கூட்டி போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆலந்தூர் தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து அனுமதியின்றி வாகன பேரணி செல்ல முயன்றதாகவும், தேமுதிக தொண்டர் ஒருவர் விமான நிலையத்தில் நின்ற கார் மீது ஏறி கொடிக்கம்பத்தால் அடித்து காரை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் சந்தோஷ் குமார் உட்பட தேமுதிகவினர் மீது ஏழு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.