தென்காசி மாவட்டத்தின் ஊத்துமலையைச் சேர்ந்த முருகேசன் (58) அங்குள்ள பள்ளி ஒன்றில் சத்துணவு அமைப்பாளராக உள்ளார். இவரது மனைவி அருகிலுள்ள கிராமப் பள்ளியின் தலைமை ஆசிரியையாக பணியாற்றிவருகிறார்.
நேற்று முன்தினம் இரவு ஊத்துமலை பழைய பேருந்து நிலையத்தின் முன்பு முருகேசன் தனது நண்பர்களுடன் நின்றிருந்தார். அப்போது அங்கு, காரில் வந்திறங்கிய 4 பேர் கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் முருகேசனை வெட்ட முயற்சித்தனர். அப்போது முருகேசன் சுதாரித்து தப்பியோடியிருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து விரட்டிய கும்பல் முருகேசனை ஒட ஒட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்திருக்கிறார்.
தகவல் அறிந்த ஊத்துமலை போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த முருகேசனை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைந்தனர். ஆனால் முருகேசனின் உயிர் வழியிலேயே பிரிந்திருக்கிறது. சம்பவம் குறித்து ஊத்துமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
கொலை செய்யப்பட்ட முருகேசனின் உறவு பெண் ஒருவர் அவரது தாயாருடன் வசித்து வந்திருக்கிறார். அந்தப் பெண்னை வீராணத்தைச் சேர்ந்த செல்வமுருகன் (30) என்பவர் ஒரு தலையாகக் காதலித்து வந்திருக்கிறாராம். மேலும் அவர் அந்தப் பெண்ணைத் தன்னைக் காதலிக்குமாறு கட்டாயப்படுத்தி வந்துள்ளார். தவிர அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்று செல்வமுருகன் பெண் கேட்டுள்ளார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தவர்கள். மேலும் செல்வமுருகன் மீது போலீஸ் நிலையத்தில் வழக்குகள் இருப்பதையறிந்தவர்கள் பெண் கொடுக்க மறுத்துள்ளனராம். ஆனாலும் செல்வமுருகன் தொடர்ந்து அந்தப் பெண்ணை தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு தொந்தரவு செய்து வர, அந்தப் பெண் மற்றும் உறவினர்கள் இது குறித்து ஊத்துமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதனடிப்படையில் ஊத்துமலை போலீசார் செல்வமுருகன் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
தன் மீது வழக்குப் பதிவு செய்ய முருகேசன் தானே காரணம் என்று கருதிய செல்வமுருகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து முருகேசனை வெட்டிக் கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து தலைமறைவான செல்வமுருகன் அவரது கூட்டாளிகள் மூன்று பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.