உங்களுக்கெல்லாம் இ.எம்.ஐயில் பொருள் கொடுக்க முடியாது என முரண்டு பிடிக்கும் நிதி நிறுவனங்களுக்கு எதிராக வெகுண்டெழுந்த பார்வை மாற்றுத்திறனாளியின் செயல் பொதுமக்கள் மத்தியில் அதிகம் பாராட்டப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்.சக்திவேல். பார்வை மாற்றுத்திறனாளியான இவர், தனது கடின உழைப்பால் படித்து முன்னேறி பெருங்களூர் அரசு மாதிரிப்பள்ளியில் முதுகலை தமிழ் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், தனது வீட்டிற்கு இ.எம்.ஐ தொகையில் ஏ.சி வாங்குவதற்காக பொன்.சக்திவேல், வடக்கு ராஜ வீதியில் உள்ள வசந்த் & கோ நிறுவனத்தில் தொலைப்பேசி மூலம் கேட்டுள்ளார். ஆனால், நிதி நிறுவனங்கள் சார்பில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு எம்.எம்.ஐ தொகையில் பொருள் கொடுப்பதில்லை எனக் கூறியதுடன் கடன் கொடுக்க மறுத்துள்ளனர். அதுமட்டுமின்றி, இதே போல் மற்றொரு பார்வை மாற்றுத்திறனாளிக்கும் சலவை இயந்திரம் பெற வந்தவர்களிடம் கடன் கொடுக்க மறுப்பு தெரிவித்ததை உதாரணமாகக் கூறியுள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பொன்.சக்திவேல் தனது ஆதங்கத்தை சோசியல் மீடியாவில் வெளிப்படுத்தியுள்ளார். அதில் அவர், "பார்வை மாற்றுத்திறனாளிகளின் கைரேகை பதிவையே, கையெழுத்தாக ஏற்க வேண்டும். சக மனிதர்களாகவே மதிக்க வேண்டும். கடன் வழங்குவதற்கு மாற்றுத்திறனைக் காரணம் காட்டக் கூடாது என ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா தொடர்ந்து கூறி வந்தாலும் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு இ.எம்.ஐ வழங்குவதில்லை” என பொன்.சக்திவேல் வருத்தம் தெரிவித்துள்ளார்.
பின்னர், இதுகுறித்து தகவலறிந்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் உயரதிகாரிகள், சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் விளக்கம் கேட்டதுடன் ஆசிரியர் பொன்.சக்திவேலிடமும் பேசியுள்ளனர். இதையடுத்து, வசந்த & கோ நிறுவன ஊழியர்கள் நேராக ஆசிரியர் வீட்டிற்கே சென்று வருத்தம் தெரிவித்ததுடன் விரைவில் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளனர். மேலும், இந்த செய்தியை நக்கீரன் மூலம் மதுரை எம்.பி. சு.வெங்கடேசனின் கவனத்திற்கு கொண்டு சென்று இருக்கிறோம் எனவும், விரைவில் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் குரல் ஒலிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.