திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் ஒழுங்குமுறை விற்பனைகூட வளாகத்தில் கட்டப்பட்டு வரும் குளிர்பதன கிடங்கு பணிகளை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர். கே.பன்னீர்செல்வம், ''தமிழக முதல்வர் வேளாண்மைக்கென தனி பட்ஜெட் அறிவித்து, சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். ஒட்டன்சத்திரத்தில் ரூ.5 கோடி மதிப்பில் 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்கு பணிகள் மூன்று மாதத்திற்குள் முழுமையாக நிறைவடைந்துவிடும். திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் கண்வலி கிழங்கிற்கு இடைத்தரகர்களால் உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்து வந்தனர்.
கண்வலி கிழங்கு கொள்முதல் செய்யும் வியாபாரிகள் யார் என்றே தெரியாமலும், உரிய விலை கிடைக்காமலும் விவசாயிகள் மனவேதனையிலிருந்து வந்தனர். கண்வலி கிழங்கின் விலையை ஒன்றிய அரசே நிர்ணயம் செய்து வருவதால், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, திமுக பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் 28 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிய அரசிடம் தேசிய விற்பனை கூட்டுறவு விற்பனையை இணையம் மூலம் செய்யக் கோரிக்கை வைத்துள்ளனர். கண்வலிக் கிழங்கு விதைகளை தமிழகத்தில் கொள்முதல் செய்யும் இடைத்தரகர்களைக் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் முதல்வரின் சிறப்பான ஆட்சியால் 20 ஆண்டு காலம் இல்லாத சாதனையாக 1.25 கோடி மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, 3.50 லட்சம் மெட்ரிக் டன் நெல்களை பாதுகாக்கும் வகையில் குடோன்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சி காலத்தில் ரோட்டில் கிடந்த நெல்களை முதல்வரின் சிறப்பான ஆட்சியால் 15 மாதத்தில் நெல்களை பாதுகாப்பாக வைத்து நல்ல அரிசிகளை பொதுமக்களுக்கு உணவுத்துறை மூலம் வழங்க முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்'' என்று கூறினார்.