தமிழ் ஈழமே தீர்வு என்று போராடிய விடுதலைப்புலிகளை பன்னாட்டு கூட்டு முயற்சியால் ராஜபக்சே அரசு தமிழ் பேசும் மக்களையும் சேர்த்து கொத்துக் குண்டுகளை கொட்டி கொன்று குவித்தது. அந்த நாள்.. இந்த நாள்.. 2009 மே 19.
பத்து ஆண்டுகள் உருண்டு ஓடிவிட்டது என்றாலும் மனிதாபிமானமுள்ள மக்களின் நெஞ்சில் அந்த நிகழ்வு ரணமாகவே உள்ளது. முள்ளிவாய்க்கால் என்ற சொல்லை கேட்டாலே உண்ண முடியாமல் உறங்கமுடியாமல் கதறிக்கூட அழமுடியாமல் கண்ணீரை வடிக்கும் எத்தனையே உள்ளங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
அந்த நாளை நினைவு கூற இன்று முள்ளிவாய்காலில் மரக்கன்றுகளை நட்டு நினைவு கூர்ந்தார்கள் ஈழத்தமிழர்கள்.
தொப்புள்கொடி உறவான தாய் தமிழகத்தில் பல்வேறு இன்னல்களுக்குப் பிறகு முள்ளிவாய்க்காலை அப்படியே பிரதிபலிக்கும் விதமாக தஞ்சையில் கட்டி எழுப்பப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பழ.நெடுமாறன் தலைமையில் கொளத்தூர் மணி, பி.ஆர். பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன்களுக்காக தனியாக அமைக்கப்பட்டுள்ள சிற்பத்திற்கு முன்னால் அனைவரும் கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிகழ்வில் அரசியலுக்கு அப்பாற்பட்ட மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.