ராணிப்பேட்டை அடுத்த புளியங்கன்ணு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் அந்தப் பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து நபர்களை வேலைக்கு வைத்து கொத்தடிமைகளாக நடத்தி வருவதாக வந்தத் தகவலை அடுத்து ராணிப்பேட்டை கோட்டாட்சியர் மனோன்மணி தலைமையிலான குழுவினர் செங்கல் சூலைக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்
ஆய்வில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த காமாட்சி(40) கார்த்தி(41) சத்யா(19) சீனு(17) சௌந்தர்யா(15) ஆகிய ஐந்து நபர்கள் கொத்தடிமைகளாக பணியாற்றுவது தெரியவந்து. இதனைத் தொடர்ந்து அவர்களை உடனடியாக கோட்டாட்சியர் மீட்டு விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணி அடுத்த சேருக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்களுக்கு முன்பணமாக ரூ.91 ஆயிரம் கொடுத்து செங்கல் சூளைக்கு வேலைக்கு அழைத்து வந்ததும் தெரிய வந்தது.
வேலைக்கு வந்தவர்களிடம் அதிகப்படியான பணிச்சுமையைப் புகுத்தியதாகவும் அதற்கான உரிய ஊதியம் வழங்காமல் கொத்தடிமைகளாக நடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து மீட்கப்பட்ட அனைவரும் அவர்களது சொந்தக் கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். செங்கல் சூளை உரிமையாளரான சுரேஷ்குமார் மீது சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.