தமிழகத்தில் பல மாவட்டங்களில் மிதமான மழை நீடித்து வரும் நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம், நீலகிரி மாவட்டத்தில் இன்று (17.07.2024) மிக கனமழை முதல் அதிக கன மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளதோடு நீலகிரி மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மலையரசி மாவட்டம் என வர்ணிக்கப்படும் நீலகிரியில் நேற்று முன்தினம் காலை முதலே பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து வருகிறது. சில இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக மயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தெப்பக்காடு தரைப்பாலம் தரையில் மூழ்கியுள்ளது. ஆற்றில் மரம் மற்றும் மூங்கில் துண்டுகள் அடித்து வருவது போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக மசனகுடி, கூடலூர் ஆகிய பகுதிகளில் தற்காலிகமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரெட் அலர்ட் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை முகாம்களுக்கு இடம் மாற்றும் பணிகள் தொடங்கியுள்ளது.