Skip to main content

ரூ.43 கோடியில் வீடூர் அணை புனரமைப்பு..!

Published on 10/10/2020 | Edited on 10/10/2020

 

Reconstruction of Veedur Dam at a cost of Rs 43 crore ..!

 

 

விழுப்புரம் மாவட்டம் விவசாயிகளை அதிகளவில் கொண்ட மாவட்டமாகும். விழுப்புரம் மாவட்டத்தில் வசிக்கும் பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பியே வாழ்க்கை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான வீடூர் அணையானது ஆக்கிரமிப்பாளர்களின் பிடியிலும், தூர்வாரப்படாததாலும் நீர்ப்பிடிப்பு பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது என விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.  

 

பல்வேறு விவசாய அமைப்புகள் அரசுக்கு தங்களின் கோரிக்கைகளை தெரிவித்துவந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்கு வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான வீடூர் அணை ஆழப்படுத்துவது குறித்து விழுப்புரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக சட்டத்துறை அமைச்சருமான சி.வி சண்முகத்தின் கோரிக்கையை ஏற்று வீடூர் அணைக்கு ரூ.43 கோடியில் ஆழப்படுத்தி புணரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ஆணை பிறப்பித்தார். 

 

இதனையடுத்து வீடூர் அணை ஆக்கிரமிப்பு பகுதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் பணி தற்பொழுது துவங்கி நடந்துவருகிறது. அதேபோல் வீடூர் அணையில் பழுதடைந்த மதகுகள் சீரமைக்கப்பட்டு, வர்ணம் பூசப்பட்டுள்ளது.

 

மேலும் பாசனத்திற்கு செல்லும் வாய்க்காலில் படிந்துள்ள மணல் திட்டுகள் அகற்றும் பணியிலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

 

தற்பொழுது வீடூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பாளர்கள் மின் துறையின் உதவியுடன் மின்சாரம் எடுத்து அப்பகுதியில் மின்மோட்டார் மூலம் நீர் பாசனத்தை ஏற்படுத்தி பயிர் செய்து வருகின்றனர். மின்துறை அதிகாரிகள் உடந்தையுடன் மின் இணைப்பு வழங்கப்பட்டு மின் மோட்டார்கள் இயக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

 

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. அதேசமயம் ஆக்கிரமிப்பாளர்கள் பயன்படுத்திவரும் மின் இணைப்பை மாவட்ட நிர்வாகம் தற்போது அணையின் புனரமைப்பின் போது அப்பகுதியில் புதியதாக தீவு போன்ற அமைப்பை ஏற்படுத்தி அப்பகுதியில் இந்த மின் இணைப்பை பயன்படுத்தி இப்பகுதி மக்களுக்கு சுற்றுலாத்தலம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

 

இதேபோன்று அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பலதரப்பட்ட மரங்களை  நடுவதன் மூலம் விரைவில்  வீடூர் அணை ஆனது  வேடந்தாங்கல் போன்று  பறவைகள் சரணாலயமாக மாறவும் வாய்ப்பு உள்ளது. அணையின் முகப்பில் பூங்கா அமைத்து பராமரிப்புக்கான ஆட்களை அதிகப்படுத்துவதன் மூலமும் இப்பகுதி மக்களின் பொழுதுபோக்கிற்காக புதிய இடம் இந்த மாவட்டத்தில் ஏற்படுத்தப்படும்.

 

ஆகவே மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட்டு ஆக்கிரமிப்பாளர்களை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் இருந்து வெளியேற்றி, அப்பகுதியில் புதிய தீவு போன்ற அமைப்பை ஏற்படுத்தி இம்மாவட்ட மக்களின் பொழுது போக்கிற்காக படகுசவாரி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. 

 

இதன்மூலம் ஊராட்சிக்கு வருவாய் வருவதுடன் அணையின் ஆக்கிரமிப்பும் தடுக்கப்படும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்